கொஞ்ச தூரத்துல ஒரு மணல் மேட்டுப் பகுதி. ஆனா அதுல காலை வச்சு நிக்க முடியாது. நின்னா உள்ளுக்குள் இழுக்கும். தலைவர்கிட்ட அதைச் சொல்லி திரும்பவும் நீந்தறோம்.
எதிர்பாராத இந்தச் சூழலால் ரொம்பவே சோர்ந்து போயிட்ட தலைவரால் தொடர்ந்து நீந்த முடியல. ‘இல்ல, முடியாது, போச்சு’ எனச் சொல்லத் தொடங்கிவிட்டார். ‘இல்ல அண்ணா, போயிடலாம், கரை வந்திடுச்சு’ன்னு சொல்லியபடியே அவருடைய பணியனைக் கெட்டியாப் பிடிச்சபடி ரெண்டு பேருமா நீந்தி ஒருவழியா கரைக்கு வந்தோம்.
இன்னொரு பக்கம் ராஜேஷும், தலைவர் மருமகனுமே வந்து சேர்ந்துட்டாங்க.
கடல் நீரை ரொம்பவே குடிச்சிருந்தார் தலைவர். கண் காது மூக்குல எல்லாம் மண் போயிடுச்சு. எல்லாருமே ரூமுக்கு வந்ததும் முக்கால் மணி நேரம் வெண்ணீர்ல குளிச்சார் தலைவர். குளிச்சுட்டு பட்டு வேஷ்டி சட்டையில வழக்கமான அதே புன்னகையில் அவர் வெளியில் வந்த அந்த நொடி, நான் தேம்பித் தேம்பி அழுதுட்டேன். தலைவர் என்னைத் தேற்றினார். படகு கவிழ்ந்தப்ப என்னுடைய கனுக்கால்ல பட்ட அடியின் பாதிப்பு இப்ப வரை தொடருது. உட்கார்ந்து எழுந்திருக்கும் போது சில நேரம் இன்னும் வலிக்குது” என்றார் சத்யா.
