அதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, “நான் விளையாடவில்லை. நான் மிகவும் உறுதியுடன் இருக்கிறேன். நான் போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர்” என்றார். இதில் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற ட்ரம்ப், “உங்களால் மூன்றாம் உலகப் போர் உருவாகும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்த நாட்டை அவமதித்துவிட்டீர்கள். இந்த முழு சந்திப்பிலும் ஒரு முறைகூட நன்றி சொல்லவில்லை” எனக் கொதித்தார். இந்த வாக்குவாதத்தில் அமெரிக்கா – உக்ரைன் இடையே கையெழுத்தாக இருந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை. பிறகு அங்கிருந்து ஜெலன்ஸ்கி வெளியேறினார்.

இதையடுத்து உக்ரைனுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியானது. அதாவது இதுவரை அமெரிக்கா சார்பில் சுமார் 71 சரக்கு கப்பல்களில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இருதரப்பு இடையே எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. இது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் போடப்படாத சூழலில், ‘ஆயுத உதவி ட்ரம்பின் உத்தரவின்படி உடனடியாக நிறுத்தப்பட்டுவிட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாடு லண்டனில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
