Last Updated:
பிரயாக்ராஜில் 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி நிறைவடைந்தது. பிரதமர் மோடி, 66 கோடி பக்தர்கள் பங்கேற்ற இந்த விழா நமது கலாச்சாரத்தை வலுப்படுத்தியதாக கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 45 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெற்ற மகா கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவருடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “ஒற்றுமையின் மகா யாகமான மகா கும்பமேளா நிறைவடைந்து விட்டது” எனவும் “பிரயாக்ராஜில் 45 நாட்கள் நடைபெற்ற இந்த கும்பமேளாவில், 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை ஒரே நேரத்தில் ஒன்றுகூடிய விதம் மிகப்பெரியது” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மகா கும்பமேளாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வெறும் சாதனை மட்டுமல்ல எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, “பல நூற்றாண்டுகளாக நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வலுவாகவும் வளமாகவும் வைத்திருக்க வலுவான அடித்தளத்தை மகா கும்பமேளா அமைத்துள்ளது” எனவும் கூறியுள்ளார். உலகம் முழுவதிலுமிருந்து வரும் மேலாண்மை வல்லுநர்கள், திட்டமிடல் மற்றும் கொள்கை நிபுணர்களுக்கான ஆராய்ச்சிப் பொருளாக பிரயாக்ராஜ் மகா கும்பமேளா மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: துஹின் காந்த பாண்டே செபி அமைப்பின் புதிய தலைவராக நியமனம்.. யார் இவர்?
தனித்துவமான பாரம்பரியத்தை குறித்து பெருமைப்படும் இந்தியா, புதிய சக்தியுடன் முன்னேறி வருவதாகவும், இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இந்த மகா கும்பமேளாவில் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒன்று கூடியதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மோடி, இந்த ஒற்றுமை நாட்டு மக்களிடையே தன்னம்பிக்கையின் ஒரு பெரிய திருவிழாவாக மாறியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அவருடைய எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
ஜனவரி 13 அன்று தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி 26 வரை நடைபெற்ற இந்த புனிதத் திருவிழாவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகளும் ஒன்று சேரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல் செய்தனர். இந்த கும்பமேளாவில் 45 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 66 கோடி பக்தர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜ் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.
February 28, 2025 10:39 AM IST
Maha Kumbh Mela 2025: பாரம்பரியத்திற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கிய மகா கும்பமேளா.. பிரதமர் மோடி பெருமிதம்!

