கிரிக்கெட் திடலில் இருந்த உயர்கோபுர மின் விளக்கால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.
உலகிலேயே அதிக வருவாய்மிக்க கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் வாரியத்தின்கீழ் 50-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, தில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருக்கும் மைதானங்களில் மட்டுமே முக்கியமான சர்வதேசப் போட்டிகளும் ஐபிஎல் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இதனால், இந்த மைதானங்கள் மட்டுமே தொடர்ச்சியாக அதிகளவிலான ரசிகர்கள் வருகையாலும் நிரம்பி வழிகின்றன.
ஆங்காங்கே இருக்கும் தரம்சாலா, ஒடிசாவின் கட்டாக் போன்ற மைதானங்களில் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே போட்டிகள் நடத்தப்படுவதாலும், ஐபிஎல் போட்டிகள்கூட நடத்தப்படாத நிலையில் போதிய பராமரிப்பின்றி உள்ளன.
இதன் தொடர்ச்சியாக ஒடிசாவின் கட்டாக் மைதானத்தால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய ஒருநாள் தொடரின் 2-வது போட்டி ஒடிசாவின் கட்டாக்கில் அமைந்துள்ள பராபதி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன் தொடர்ச்சியாக விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவின் அதிரடி சதத்தால் 305 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து தொடரையும் கைப்பற்றியது.
இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸின் 6-வது ஓவரின்போது மைதானத்தில் இருந்த உயர்கோபுர மின் விளக்கில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் போட்டி 35 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்பட்டது. இது பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்களை எழுப்பிய நிலையில் இது குறித்து முறையான விளக்கமளிக்க ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
