கடந்த ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைமையகத்தை (USRB) கல்பனா நாயக் அடைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, அவரது அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கல்பனா நாயக், “என் அறையை சென்று பார்த்தபோது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். சற்று விரைவாக என் அறைக்கு நான் சென்றிருந்தால், நான் உயிரிழந்திருப்பேன். முறைகேடுகள் குறித்து நான் வெளிப்படுத்திய சில நாள்களில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது” என்று புகார் தெரிவித்திருந்தார்.

இந்த தீ விபத்து காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் பிற பணிகளுக்கான நியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் வந்த கொலை முயற்சியாக இருக்கலாம் என்று குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், ஏர் கண்டிஷனிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் காவல்துறைத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் காவல்துறையின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பெண் ஏடிஜிபியின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருப்பதும், அவருக்கு நடந்த தீ விபத்து சம்பவத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதும்தான் இப்போது அரசியல் சர்ச்சைகள் வெடிப்பதற்குக் காரணமாகியிருக்கிறது.
