விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் அறிக்கை..
“விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சராகும் தகுதி இல்லை” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்திருந்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருமாவளவன் குறித்துப் பேசிய எல்.முருகன், “அருந்ததியர் உள் இட ஒதுக்கீடுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த திருமாவளவன் எப்படி தலித் மக்களுக்கான தலைவராக இருக்க முடியும்? அவரை ஒரு சிறிய கட்சியின் தலைவராகவேப் பார்க்கிறேன்.” என்று எல்.முருகன் பேசியிருந்தார்.
எல்.முருகனுக்கு பதிலடி தரும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “திருமாவளவனுக்கு முதல்வராவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது. நாங்கள் அவரை முதலமைச்சராக்கிக் காட்டுவோம்” எனத் தெரிவித்தார்.
இதற்கு இடையே, “எல்.முருகனின் விஷமத்தை விட அருந்ததிய மக்களை மொழியால் பிரிக்கும் சீமானின் கருத்து ஆபத்தானது” என்று விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எல்.முருகன் பேசுவது விமர்சனம் அல்ல…
அந்த அறிக்கையில், “நேற்றும் இன்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்தும், தலைவர் தொல்.திருமாவளவன் குறித்தும் பாஜகவை சார்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நண்பர் சீமான் அவர்களும் எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் கருத்துகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். இக்கருத்துகள் கவனமாக அணுகப்பட வேண்டியவை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எல்.முருகன் கருத்து குறித்து, “எல் முருகன் பேசுவது விமர்சனம் அல்ல. அப்பட்டமான பொய்கள் நிரம்பிய அவதூறு.” எனக் குறிப்பிட்டுள்ளார்.