விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளித் திருநாளில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது 23.10.2018 ஆம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.
மேலும், உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
