இந்திய வான்படையின் 92வது தொடக்க நாள் நிகழ்வையொட்டி, சென்னை, மெரீனா கடற்கரையில் நடைபெற்ற வான்படையின் வீர தீர செயல் நிகழ்ச்சியின்போது கூட்டநெரிசலில் சிக்கி, உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு ஐந்துபேர் உயிரிழந்திருக்கிற செய்தி பேரதிர்ச்சி தருகிறது. இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சையிலிருப்பதும், வீர தீர நிகழ்ச்சி ஐந்து உயிர்களின் பேரிழப்போடு நிறைவுபெற்றிருப்பதும் பெரும் வேதனையைத் தருகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்.

15 இலட்சம் பார்வையாளர்களை வரவழைத்து, அதிகப்படியாகப் பார்க்கப்பட்ட வான்படை வீர தீர நிகழ்ச்சியாக லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வில், அவ்வளவு இலட்சம் பேருக்கான முன்னேற்பாட்டை செய்யாத மாநிலத்தை ஆளும் திமுக அரசின் நிர்வாகத்தோல்வியே ஐந்து பேரின் உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. ஓரிடத்திலே இத்தனை இலட்சத்துக்கும் மேலான மக்கள் கூடினால், அங்கு ஏற்பாடு செய்ய வேண்டிய இலவசக் குடிநீர், கழிவறை வசதிகள், முதியோர்-பெண்கள்-குழந்தைகளுக்கான குடில்கள், போக்குவரத்து ஒழுங்கு, மருத்துவ ஏற்பாடுகள், போதிய மீட்புக்குழுக்கள், காவல்துறையினர் உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளும் சரிவர அமைக்கப்பட்டு, நிர்வகிக்கப்படாததே மக்களைப் பெரும் இன்னலுக்கு ஆளாக்கி, ஐந்து உயிர்களைப் போக்கியிருக்கிறது.
