தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜி.கே.வாசன், “வரும் 2026 -ல் த.மா.க குரல் சட்டமன்றத் தேர்தலில் ஒலிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். அதற்காக, தற்போது உறுப்பினர்கள் சேர்க்கையும் செய்து வருகிறோம்.
மது விலக்கு கொள்கையை ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டும். வி.சி.க மாநாட்டில் இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். அகில இந்திய அளவிலான கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். அவர்கள் ஆளும் மாநிலங்களில் அவர்களின் மதுக் கொள்கை என்ன என்பதை அவர்கள் விளக்க வேண்டும். தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதற்கான முழு அதிகாரம் தமிழக அரசிடம் உள்ளது. மத்திய அரசு மது விலக்கு கொள்கையை நிறைவேற்ற வேண்டும் என மாநில அரசு கூறுவது நாங்கள் மதுக்கடைகளை மூட மாட்டோம் என உறுதி எடுத்ததாகவே தெரிகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள அகில இந்திய கட்சி தலைவர்கள் அவர்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் மது விலக்கு கொள்கையை முன்னெடுக்கட்டும். மது கொள்கை மூலம் மக்களை ஏமாற்றுபவர்களை வாக்குச்சீட்டு மூலம் மக்கள் ஏமாற்றுவார்கள்.
மீனவர்கள் பிரச்னை தொடர் பிரச்னையாக உள்ளது. 160 -க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும். மேலும், இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். இலங்கை அரசோடு கண்டிப்போடு பேசி மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு செல்கிறார். அவர் புதிய அதிபரிடம் இந்த விவகாரம் குறித்து பேசி மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருவார் என நம்புகிறேன்.
