கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு சிக்கலை உண்டாக்கியிருக்கிறது ஒரு வழக்கு. அவர்மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், `முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும்’ என்ற அழுத்தங்கள் அதிகரித்திருக்கின்றன.
என்ன வழக்கு?
MUDA (Mysuru Urban Development Authority), அதாவது மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் சித்தராமையாவின் ஆட்சிக்காலத்தில் 4,000 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள். குறிப்பாக சித்தராமையாவின் மனைவி பார்வதி பெயரில் சட்டவிரோதமாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கின்றன. இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்த பா.ஜ.க-வினர், `சித்தராமையா உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஜூலை மாதத்தில் ஆபிரகாம், சிநேகமயி கிருஷ்ணா, பிரதீப் குமார் என்ற மூன்று ஆர்வலர்கள் ஆளுநரைச் சந்தித்து, `இந்த முறைகேடுகள் தொடர்பாக முதல்வர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் புகாரளித்தனர். இந்த நிலையில், ஆகஸ்ட் மாத மத்தியில் சித்தராமையா மீதான புகாரை விசாரிக்க அனுமதியளித்தார் கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட். “ஆளுநரை வைத்து பா.ஜ.க செய்யும் அப்பட்டமான அரசியல் இது” எனக் கொந்தளித்தனர் ஆளும் காங்கிரஸ் கட்சியினர்.
சிக்கலில் சித்தராமையா?
தொடர்ந்து, ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகினார் சித்தராமையா. ஆனால், சித்தராமையாவின் மனுவைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். இதையடுத்து, “சித்தராமையா மீதான புகாரை மைசூர் லோக் ஆயுக்தா காவல்துறை விசாரித்து, ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” எனச் சிறப்பு நீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது. இது முதல்வர் சித்தராமையாவுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.
“வழக்கை எதிர்கொள்ளத் தயார். நீதிமன்றம் என்னைக் குற்றவாளி எனச் சொல்லவில்லை. நான் குற்றமற்றவன் என்பதை சட்டப்படி நிரூபிப்பேன்” எனச் சபதம் ஏற்றிருக்கிறார் சித்தராமையா. எதிர்க்கட்சிகளோ, “சித்தராமையா, முதல்வர் பதவியில் நீடித்தால், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்த வழக்கிலிருந்து தப்பிக்க முயல்வார். எனவே, உடனடியாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

`முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தால், துணை முதல்வராக இருக்கும் டி.கே.சிவக்குமாரைக் காங்கிரஸ் தலைமை முதல்வராக்கிவிடும்’ என்ற பேச்சுகள் கர்நாடக அரசியலில் வட்டமடித்து வருகின்றன. ஆனால் டி.கே.சிவக்குமாரோ, “இது பா.ஜ.க-வின் சதி. முதல்வர் எந்தத் தவறும் செய்யவில்லை. என்னைப் போலவே சித்தராமையாவையும் பா.ஜ.க டார்கெட் செய்ய நினைக்கிறது. எனக்கு எதிரான வழக்கை எப்படி நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோ, அதேபோல, முதல்வருக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்படும். இது அவருக்குப் பின்னடைவு கிடையாது” என்றிருக்கிறார்.
மாற்றப்படுவாரா சித்தராமையா?
`காங்கிரஸ் தலைமை சித்தராமையாவின் பதவியைப் பறிக்குமா?’ என்பது குறித்துப் பேசும் கர்நாடக அரசியல் பார்வையாளர்கள், “சிறுபான்மையினர்கள், ஓ.பி.சி, தலித் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க தலைவராக இருக்கிறார் சித்தராமையா. அவரை பதவியிலிருந்து விலகிக் கொள்ளச் சொன்னால், அது காங்கிரஸ் கட்சிக்குத்தான் பின்னடைவாக அமையும். 1990-ம் ஆண்டு, கர்நாடகாவில் ஏற்பட்ட கலவரத்தைக் காரணம் காட்டி அப்போதைய முதல்வர் வீரேந்திர பாட்டீலை பதவி விலகச் சொன்னார் ராஜிவ் காந்தி. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த செல்வாக்குமிக்க தலைவரான வீரேந்திர பாட்டீல் விலகியது, காங்கிரஸைக் கர்நாடகாவில் வலுவிழக்கச் செய்தது. எனவே, அதே தவறை மீண்டும் காங்கிரஸ் தலைமை செய்யாது.

மேலும், சித்தராமையாவின் பதவியை இப்போது பறித்தால், அது எதிர்க்கட்சிகளுக்கு வெற்றியாக மாறிவிடும். எனவே, இப்போதைக்கு சித்தராமையாவின் பதவி பறிக்கப்படாது. ஆனால், வழக்கு தீவிரமடையும் பட்சத்தில், பதவி பறிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அப்படி சித்தராமையாவின் பதவி பறிபோனால், டி.கே.சிவக்குமார் முதல்வராக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அவரின் ஒக்கலிகா சமூகத்தைத் தாண்டி, மற்ற சமூகத்தினர் மத்தியில் சிவக்குமாருக்குச் செல்வாக்கு குறைவுதான். எனவே, மூத்த தலைவர்களான பரமேஸ்வரா, எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜார்கிஹோலி ஆகியோரைக்கூட காங்கிரஸ் தலைமை பரீசிலனையில் எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள்.
இந்த வழக்கின் போக்கைப் பொறுத்தே சித்தராமையாவின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
