`அலுவகலக நடைமுறையை மீறிச் செயல்பட்டதாக மெமோ அனுப்பப்பட்டு, சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதராகப் பணியாற்றி வந்த மாதவி பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு, “ஒரு பெண் லிப்ஸ்டிக் போட்டு அலுவலகம் வரக்கூடாது என்பதுதான் சென்னை மாநகராட்சியின் அலுவலக நடைமுறையா?” என தபேதார் கேள்வி எழுப்பியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட தபேதார் மாதவியை தொடர்பு கொண்டு பேசினோம். “சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதாராக கடந்து மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். அதேபோல சென்னையின் முதல் பட்டியலின பெண் மேயராக பிரியா ராஜன் பதவியேற்றதிலிருந்தே அவருக்கு உதவியாக இருந்து எனது தபேதார் பணியை மேற்கொண்டு வருகிறேன்.
அந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட மகளிர் தின விழாவில், மற்ற பெண் மாநகராட்சி பணியாளர்களுடன் சேர்ந்து நானும் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அப்போது அங்கிருந்த மற்ற ஊழியர்கள் கைதட்டி ஆராவரம் செய்து உற்சாகப்படுத்தினர். அந்த நிகழ்ச்சியை அடுத்து என்னிடம் பேசிய மேயர் பிரியா, லிப்ஸ்டிக், புடவை சகிதம் அலங்காரமாகக் கலந்துகொண்டதற்கு அதிருப்தி தெரிவித்தார். பெண்களின் திறமையை வெளிப்படுத்தும் நோக்கில், 50 வயதாகும் என்னாலும் இதை செய்துகாட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையில்தான் கலந்துகொண்டதாகத் தெரிவித்தேன்.
நான் சிறிய வயதிலிருந்தே லிப்ஸ்டிக் இடுகிறேன். லிப்ஸ்டிக் இடுவது தனிநபர் உரிமை என்பதால் வழக்கம்போல லிப்ஸ்டிக் அணிந்தபடியே மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங்கிற்கு தொடர்ந்து பணிக்கு வந்துகொண்டிருந்தேன்.
இதையடுத்து, மேயர் பிரியாவின் நேர்முக உதவியாளரான சிவசங்கர் என்னை அழைத்து, “நீங்கள் ஏன் மேயர் மேடத்தைப் போலவே டார்க் கலரில் லிப்ஸ்டிக் போடுகிறீர்கள். மற்றவர்களைப்போல லைட் கலரில் போட்டுக்கொள்ள வேண்டியதுதானே?” என்றார்.
நான் அதைப் பெரிதுபடுத்தவில்லை. இந்த நிலையில்தான், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி மேயரின் நேர்முக உதவியாளர் சிவசங்கர், என்மீது `அலுவகலத்துக்கு உரிய நேரத்துக்கு வருவதில்லை, தொடர்ந்து காலதாமதமாக வருகிறீர்கள், முறைப்பணி நாட்களில் முறையாக பணிக்கு வருவதில்லை, உயரதிகாரிகளின் ஆணையை உதாசினப்படுத்துகிறீர்கள், அலுவலக நடைமுறைய மீறுகிறீர்கள்’ என்றெல்லாம் ஐந்து காரணங்களை பட்டியலிட்டு எனக்கு மெமோ அனுப்பினார்.
அப்போதே அதற்கு பதிலளித்த நான், `எப்போதும் உரிய நேரத்துக்குதான் அலுவலகம் வருகிறேன். நான் தொலைதூரத்திலிருந்து பணிக்கு வருவதாலும், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாலும் சில நாட்களில் தாமதமாக அலுவலகம் வர நேரிட்டது. இருப்பினும் இரவு 9 மணி வரைக்கும் இருந்து பணிசெய்துவிட்டு தாமதமாகத்தான் வீட்டுக்குச் செல்கிறேன்’ என்று பதிலளித்தேன். மேலும், உயரதிகாரிகளின் ஆணையை உதாசினப்படுத்தியதாக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அப்படி நான் எந்த ஆணையை உதாசினப்படுத்தினேன் என்று கூறுங்கள் என பதில் கேட்டேன். தொடர்ந்து, அலுவலக நடைமுறைய மீறியதாக சொன்ன குற்றச்சாட்டுக்கு, `உதட்டில் லிப்ஸ்டிக் பூசக்கூடாது என்று நீங்கள் கூறினீர்கள். அதையும்மீறி நான் பூசிக்கொண்டு பணிக்கு வந்தேன். அது குற்றம் என்றால் எந்த அரசாணையில் அப்படி விதி இருக்கிறது என்று கேட்டு’ மெமோவுக்கு பதிலளித்தேன். இதையடுத்து என்னை சென்னை மாநகராட்சி தபேதார் பதவியிலிருந்து விடுவித்து மணலி மண்டலத்துக்கு பணியிடமாற்றம் செய்துவிட்டனர்.
நான் தினமும் ஆவடியிலிருந்து சென்னை மாநகராட்சிக்கு பணிக்கு வந்துகொண்டிருந்தேன். இப்போது என் இருப்பிடத்திலிருந்து 70 கி.மீ தூரத்திலுள்ள மணலிக்கு பணியிடமாற்றம் செய்துவிட்டார்கள். அருகிலுள்ள அம்பத்தூர், வளசரவாக்கத்தில் பணியிட மாற்றம் செய்திருந்தால் கூட பரவாயில்லை, இவ்வளது தூரத்துக்கு என்னை தூக்கியடித்திருக்கிறார்கள். நானோ சிங்கிள் மதர். கல்லூரி செல்லும் வயதில் எனக்கு பெண் குழந்தை இருக்கிறார். காலிலும் எலும்பு முறிவு. இந்த நிலையில், என்னை மணலிக்கு பணியிடமாற்றம் செய்திருப்பதால் கடுமையான சிரமத்துக்கும் மன உளைச்சலுக்குள் ஆளாகிவருகிறேன். அப்படி என்ன நான் தவறு செய்துவிட்டேன்?” என்றார் வேதனையுடன்.

இந்த விவகாரம் ரிப்பன் பில்டிங் வட்டாரத்தில் பெரும் புகைச்சலைக் கிளப்பியிருக்கும் நிலையில், மேயர் அலுவகத்திலிருந்து, “லிப்ஸ்டிக் பூசி பணிக்கு வந்ததால் ஒன்றும் தபேதார் மாதவியை பணியிட மாற்றம் செய்யவில்லை. அவர் சரவர பணிக்கு வராததாலும், முறையாக பணியை செய்யாததாலும்தான் மெமோ கொடுக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்” விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
