திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் கலந்திருப்பதாக வெளியாக செய்தி நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் அடங்குவதற்குள் தற்போது தமிழ்நாட்டில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் பிராசதத்திலும் விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாக பாஜக நிர்வாகிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
ஏ.ஆர்.ஃபுட்ஸ் நிறுவனம் தான் பழனி கோவிலுக்கும் நெய் விநியோகம் செய்யப்படுகிறது என்ற தவறான செய்தியை பரப்பிய பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபடும் லட்டு தயாரிப்பதற்கு திண்டுக்கல்லை சேர்ந்த ஏ ஆர் ஃபுட்ஸ் நிறுவனம் வழங்கிய நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்து கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் வினோத் பி செல்வம் மற்றும் பாஜக தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தனர்.
அதில், திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர். ஃபுட்ஸ் நிறுவனம்தான் பழனி கோவிலுக்கும் நெய் விநியோகம் செய்கிறது. அந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ராஜசேகரன் என்பவர் பழனி கோவில் நிர்வாக குழு தலைவராக செயல்படுகிறார் என்ற செய்தி சந்தேகங்களை எழுப்புகிறது. தமிழ்நாடு அரசு இவரை பணிநீக்கம் செய்வதுடன் ஆவின் நிறுவனத்திடம் நெய் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது எக்ஸ் தளத்தில் தவறான செய்தியை பதிவு செய்திருந்தார்.
தமிழ்நாடு அரசு விளக்கம்
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் “பழனி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படும் நெய் ஆவின் நிறுவனத்தில் இருந்தே பெறப்படுகிறது” என்றும் அறநிலையத்துறை கூறியிருந்தது.
மேலும், “பழனி கோவில் அறங்காவலர் குழு கடந்த மாதம் பதவி காலம் முடிந்து விட்டது. ராஜசேகரன் என்பவர் குழுவின் தலைவர் இல்லை என்பதும் அவர் குழுவில் ஒரு உறுப்பினர் தான்” என விளக்கம் அளிக்கப்பட்டது.
போலீசில் புகார்
இதைத்தொடர்ந்து பழனி கோவில் நிர்வாகம் சார்பில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் பா.ஜ.க தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் மீது தவறான தகவலை பரப்பியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர். ஃபுட்ஸ் விளக்கம்
முன்னதாக, திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, திண்டுக்கல் – மதுரை சாலை பிள்ளையார்நத்தம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை எனத் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர். ஃபுட்ஸ் சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. திருப்பதி தேவஸ்தானம் விவகாரத்தில் எழுத்து பூர்வமாக அனைத்து கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பதாகவும், தங்களது நிறுவனத்தின் நெய் தரமானது என எங்கு வேண்டுமானாலும் நிருபிக்க தயார் எனவும் தெரிவிக்கப்பட்டது.


என்ன கருமாந்திரமோ தெரியவில்லை திருப்பதி லட்டு விவகாரத்திலும் சர்ச்சை பழனி பஞ்சாமிர்தம் விவகாரத்திலும் சர்ச்சை இரண்டு மாநில அரசுகளும் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று தெரியவில்லை