திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக மது ஒழிப்பு மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் கலந்து கொள்ளலாம் என சொல்லியது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கோரிக்கையை 1999 ஆம் ஆண்டே முன்வைத்த கட்சி விசிக” என முன்னர் திருமாவாளவன் பேசிய வீடியோவை இப்போது பகிர்ந்து பரபரப்பை பற்றவைத்துள்ளார். முதல்வர் சென்னை திரும்பிய தருணத்தில் அந்த வீடியோவை அவர் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் அந்த வீடியோ வை டெலீட் செய்த திருமா, பின்னர் மீண்டும் பதிவிட்டு மீண்டும் டெலீட் செய்திருக்கிறார்.
நம்மிடம் பேசிய திமுக கூட்டணியை சேர்ந்த சிலர், “ஆக்டோபர் 2-ம் தேதி வி.சி.க நடத்தும் போதை மற்றும் மதுஒழிப்பு மகளிர் மாநாட்டுக்கு அ.தி.மு.க-வையும் அழைத்திருந்தார் திருமாவளவன். இதனால் தி.மு.க கூட்டணியில் பிளவா.. புதிய கூட்டணிக்கு அச்சாரமிடுகிறதா விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற விவாதம் ஓடிக் கொண்டிருக்கும்போதே, `ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்பதை 1999-ம் ஆண்டே வலியுறுத்திய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி’ என திருமா பேசும் பழைய வீடியோ அவரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு, சிறிது நேரத்திலேயே டெலீட் செய்யப்பட்டிருப்பது தி.மு.க கூட்டணியில் அனலை கூட்டியிருக்கிறது” என்றனர்
தொடர்ந்து பேசியவர்கள், “திருமா பேசும் அந்த பழைய வீடியோ வைரலாகவே, அந்த பதிவை டெலீட் செய்திருக்கிறார். ஆனால் அந்த கோரிக்கையை வி.சி.க உறுதியாக முன்னெடுக்கப் போவதாகவும் இக்கோரிக்கை குறித்து உரிய காரணங்களுடன் திருமா வரும் காலத்தில் பேசயிருப்பதால் இப்போதைக்கு பழைய காணொளி கொண்ட பதிவை நீக்கியிருக்கிறார்கள்” என்றனர்.
