61 நாள்கள் மீன்பிடி தடைகாலம் முடிந்து, தமிழகம் முழுவதும் கடந்த 14-ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேஸ்வரம், பாம்பன், கடலாடி, தேவிப்பட்டினம், சாயல்குடி அதனை சுற்றியுள்ள கடற்கரை கிராமங்களில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி எல்லை தாண்டி நெடுந்தீவு பகுதியில் தன்னந்தனியாக நின்றிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விசைபடகை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. அதில் கடத்தல் பொருட்கள் ஏதேனும் கொண்டு வந்தார்களா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தடைக்காலம் முடிந்து 14ம் தேதி கடலுக்குச் மீன்பிடிக்க சென்ற நிலையில் மூன்று தினங்களுக்குள் இலங்கை கடற்படையால் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த படகு பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் நேற்று முன்தினம் எல்லை தாண்டி வந்ததாக ஒன்பது மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இது தமிழக முழுவதும் உள்ள மீனவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

