தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், சமக்ரா சிக்ஷா ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதியை மத்திய பா.ஜ.க அரசு தர மறுப்பதாக திமுக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தேசிய கல்விக் கொள்கை குறித்த வாதம் மீண்டும் நீள்கிறது.
முன்னதாக, அண்ணாமலை லண்டன் செல்வதற்கு முன்பாக, `பி.எம் ஸ்ரீ பள்ளித் திட்டத்துக்கு மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட திமுக அரசு, அரசியல் லாபத்துக்காக `அந்தத் திட்டத்தில் மும்மொழிக் கொள்கை இருக்கிறது. அதனால் ஏற்க மாட்டோம்” என்று இப்போது கூறிவருகிறது. மத்திய அரசு கல்விக்கு நிதி ஒதுக்கிக் கொண்டுதான் இருக்கிறது’ என்று கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு, `2024-25 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டுக்கு ரூ.3,586 கோடி கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ஒன்றிய அரசின் பங்கு ரூ.2,152 கோடி (60 விழுக்காடு). இதற்கான முன்மொழிவுகள் கடந்த ஏப்ரலிலேயே சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், முதல் தவணையான ரூ.573 கோடி விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுக்கான ரூ.249 கோடியை ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. விவாதங்கள் தேவைப்படும் தேசிய கல்விக் கொள்கையினை, கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது’ என்று குறிப்பிட்டு நிதியை ஒதுக்க நடவடிக்குமாறு கடிதம் எழுதியிருந்தார்.
