
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் (MPLADS) கீழ், ஒவ்வொரு எம்.பி-யும் தங்கள் தொகுதியில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள தொகுதி மேம்பாட்டு நிதி என்ற பெயரில் ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இப்படியிருக்க தெலங்கானாவில் பா.ஜ.க எம்.பி-யொருவர், தொகுதி மேம்பாட்டு நிதியில் தனக்குச் சொந்தமாக வீடுகட்டிக்கொண்டது தெரியவந்திருக்கிறது.
இதில் சம்பந்தப்பட்ட பா.ஜ.க எம்.பி சோயம் பாபு ராவ், கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு தனது கட்சித் தொண்டர்களிடம் பேசுகையில், தாமாகவே இதை வெளிப்படுத்தியிருக்கிறார். இது வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பலரும் இது பற்றிக் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோவில், “எனக்கு சொந்தமாக வீடு இல்லை. வீடு இல்லையென்றால் எனக்கு எந்த மதிப்பும் இருக்காது. அதனால், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எனக்கு வீடு கட்டிக்கொண்டேன். அதோடு என் மகன் திருமணத்துக்குகூட இந்த நிதியிலிருந்து கொஞ்சம் செலவுசெய்தேன். நான் என்ன செய்தேனோ அதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், கடந்த காலங்களில் இதுபோன்று நிதியை மோசடி செய்த தலைவர்கள் யாரும் அதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். இப்போது கூட இந்தப் பணத்தை என் சொந்த செலவுக்கு பயன்படுத்த முடியும். ஆனால் ஒருமுறை தான் என்னை நீங்கள் மன்னிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். மீண்டும் மீண்டும் நான் அதைச் செய்தால் என்னை மனிதனாக நடத்த மாட்டீர்கள்” என்று சோயம் பாபு ராவ் பேசினார்.
இந்த வீடியோ பரவலாக பேசுபொருளானதையடுத்து இது பற்றி ஊடகத்திடம் பேசிய சோயம் பாபு ராவ், “நான் பிஸியாக இருந்ததால் அந்த வீடியோவை இன்னும் பார்க்கவில்லை. அதைப் பார்த்தல் தான் என்னால் அது குறித்து கருத்துச்சொல்ல முடியும். மேலும், அந்த வீடியோ யாரோ சிலரால் திரிக்கப்பட்டதாக இருக்கலாம். குறிப்பாக அது கட்சித் தொண்டர்களுடனான என்னுடைய தனிப்பட்ட சந்திப்பு” என்று தெரிவித்தார்.

