விஜய் மக்கள் இயக்கத்தின் சமீபகால செயல்பாடுகள் அனைத்தும், நடிகர் விஜய் விரைவில் அரசியலில் இறங்கப்போகிறார் என்பதை உறுதிசெய்வதாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழ்நாடு முழுவதும் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து சான்றிதழ், ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்பின்படி, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழ்நாடு முழுவதும் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கினார்.
அப்போது மேடையில் மாணவிகள், மாணவர்கள் முன்னிலையில் பேசிய நடிகர் விஜய், “புதுசா பொறுப்புணர்ச்சி வந்ததுபோல உணர்கிறேன். அம்பேத்கர், பெரியார், காமராஜர் என எல்லா தலைவர்களையும் படியுங்கள். நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். நம்ம விரலை வைத்து நம்ம கண்ணையே குத்தும் வேலைதான் நடந்துகொண்டிருக்கு. அதைத்தான் நாமும் செய்துகொண்டிருக்கிறோம். அதாவது, காசு வாங்கிட்டு ஓட்டுப்போடுறது.

உதாரணத்துக்கு ஒரு தொகுதியில் ஒன்றரை லட்சம் பேருக்கு ஓட்டுக்கு 1,000 ரூபாய் கொடுத்தால், ரூ.15 கோடி செலவாகும். ஒருத்தர் ரூ.15 கோடி செலவுசெய்கிறாரென்றால் அதுக்கு முன்னாடி அவர் எவ்வளவு சம்பாதித்திருப்பார். இதையெல்லாம் தெரிஞ்சிக்கணும். தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் பெற்றோர்களிடம் `இனிமே காசு வாங்கிட்டு ஓட்டுப்போடாதீங்க’னு சொல்லுங்க. நீங்க சொன்னா கண்டிப்பா நடக்கும். ஏனென்றால் அடுத்து நீங்கள்தான் முதல் தடவை வாக்களிக்கும் வாக்காளர்களாக வரப்போகிறீர்கள்” என்றார்.

