அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது, இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக-வின் வாக்கு சதவிகிதம் சரிந்துள்ளது. அதேநேரத்தில் 2019 தேர்தலை விட இந்தத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது.

2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 18.80% வாக்குகளை பெற்றது. தற்போது பாஜக கூட்டணி 18.28% வாக்குகளை பெற்றுள்ளது. இது 0.2 % சரிவாகும். ஆனால், எதிர்கட்சிகள், அதிமுக வாக்கு வங்கி சரிந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.
கோவையில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றினர். தமிழக மக்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு மாதிரியும், சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதிரியும் வாக்களிப்பார்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மையாக வெற்றி பெறும். மேற்கு மண்டலம் திமுகவின் கோட்டை என கற்பனை செய்து கொண்டிருக்கின்றனர்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் எவ்வளவு வாக்கு சதவிகிதம் பெற்றுள்ளனர். அவர்கள் பிரிந்து போன பிறகு அதிமுகவின் வாக்கு ஒரு சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் கட்சி வளமாக இருப்பது தெரிகிறது.” என்றவரிடம்,

அதிமுக ஒருங்கிணைப்பு குழு குறித்த கேள்விக்கு, “ரோட்டில் செல்பவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. கட்சியில் இல்லாதவர்களை எல்லாம் பெரிய ஆள் என்று நினைத்து கேள்வி கேட்கிறீர்கள்.” என்றார்.
அண்மையில் அனைத்துத் தலைவர்களிடமும் பேசி ஒருமித்த கருத்துடன் கட்சியை ஒருங்கிணைப்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்திருப்பதாக முன்னாள் எம்பி-யான கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ-வான ஜே.சி.டி.பிரபாகர், ஓபிஎஸ் அணியின் முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளரான வா.புகழேந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

😀😀😀😀😀😀😀😀😀😀😀