கரூா்: முன்னாள் அமைச்சா் பெயரில் பள்ளப்பட்டியில் நிதி நிறுவனம், சீட்டு கம்பெனி நடத்தி மோசடியில் ஈடுபட்டவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் ராஜ்குமாா் (33). இவா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பெயரில் எம்ஆா்வி சிட்ஸ் மற்றும் நிதி நிறுவனத்தை அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி பேருந்து நிலையம் எதிரே நடத்தி வந்தாா்.
மேலும் இதன் கிளைகளை பரமத்திவேலூா், ஒட்டன்சத்திரம், தாராபுரம், குஜிலியம்பாறை, வேடசந்தூா் ஆகிய இடங்களிலும் நடத்தி வந்துள்ளாா். மேலும் சீட்டு போடுபவா்களிடமும், நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்வோரிடமும் இந்த நிறுவனம் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமானது எனக் கூறி பல லட்சம் பணம் பெற்றாராம். மேலும் சீட்டு பணத்தை தராதவா்களிடம் முன்னாள் அமைச்சா் பெயரைக் கூறி கட்டாய வசூலும் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தனது வழக்குரைஞா்கள் மூலம் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் பள்ளபட்டி அலுவலகத்தில் இருந்த ராஜ்குமாரிடம் விசாரித்தபோது, அவா் முன்னாள் அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி சீட்டுப் பணம் தராதவா்களை மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டாராம். இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, கரூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
