தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முக்கிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, பாரத் ராஷ்ட்ர சமிதி ஆகியவை தனித்து களம் காண்கின்றன. ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி ஹைதராபாத் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது.
2019 மக்களவைத் தேர்தலில் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி, 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றி கண்டன. ஏஐஎம்ஐஎம் கட்சி ஹைதராபாத்தை மட்டும் கைப்பற்றியது.
நடப்புத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் கட்சி, ஏறக்குறைய 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவும், பாரத் ராஷ்ட்ர சமிதியும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதையும் படிக்க:
மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்.. என்ன காரணம் தெரியுமா?
இந்தத் தேர்தலில் குறைந்தது 14 தொகுதிகளில் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்சியைப் பிடித்த முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் தலைமைக்கும் செல்வாக்குக்குமான பரீட்சையாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.
அரசுப் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பரப்புரை செய்து வருகிறது.
நரேந்திர மோடி தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள், பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் ஆகியவற்றை முன்வைத்து பாஜக வாக்கு சேகரித்து வருகிறது.
இதையும் படிக்க:
அரசு பேருந்தில் பயணித்த ராகுல் காந்தி… எங்கே தெரியுமா?
காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு ஈடுகொடுக்கும் வகையில், பாரத் ராஷ்ட்ர சமிதியும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறது. எனினும், டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கைது செய்யப்பட்டிருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல், அக்கட்சியின் 9 எம்.பி.,-க்களில் ஐந்து பேர் மற்ற கட்சிகளுக்கு தாவியதும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மும்முனைப் போட்டி நிலவும் தெலங்கானாவில் யாருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது ஜூன் 4-ம் தேதி தெரிந்துவிடும்.
.
