திருப்பூர் அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரத்தில் ஈடுபட்ட அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி தினேஷ் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காருக்குள் சிறுமியை அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளது இந்த கும்பல்.
ஜெ. என அதிமுக கொடி வண்ணத்தில் எழுதப்பட்ட இவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காங்கேயம் அடுத்த வெள்ளக்கோவிலில் கடந்த 9-ஆம் தேதி வீரகுமாரசாமி கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த கோயில் திருவிழாவில் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளைப் பார்வையிடுவதற்காக 17 வயது சிறுமி தனது தாயாருடன் வந்துள்ளார். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போதே சிறுமி மாயமாகியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தாய் அருகில் உள்ள இடங்களில் தேடியுள்ளார். கிடைக்காததால் உறவினர்களுக்குத் தகவல் அளித்துத் தேடுதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே மறுநாள் காலை வீடு திரும்பிய சிறுமி, தன்னை சிலர் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக தனக்கு நடந்த கொடுமையைக் கூறி அழுதுள்ளார்.
பின்னர், இது குறித்து சிறுமியின் தாயார் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம்(11.03.2024) அன்று வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த பிரபாகர், செம்மான்டபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி மூலனூர் மம்பாடியை சேர்ந்த தினேஷ் (27), பாலசுப்ரமணியம் (30), வெள்ளகோவில் ஏ.பி.புதூரை சேர்ந்த நவீன்குமார் (26), மயில்ரங்கத்தை சேர்ந்த நந்தகுமார் (30), பாரதி நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் சதீஷ் (28) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் நேற்று(செவ்வாய்கிழமை) கைது செய்தனர்.
பின்னர், காங்கேயம் மகளிர் காவல்நிலைய போலீசார் அவர்கள் ஏழு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இது போன்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் காவல்துறையினர் .இதுவே பொது மக்களின் எதிர்பார்ப்பு