கோவையில் உள்ள திமுக அலுவலகத்தில் தொமுச கூட்டம் நடைபெற்ற போது, நிர்வாகிகள் முன்னிலையில் ஊழியர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட திமுக அலுவலகம் வடகோவை பகுதியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் திமுக மற்றும் கிளை அமைப்புகளின் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று கோவை, நீலகிரி மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கோவையில் உள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகம்
இதனை முன்னிட்டு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் இருக்கக்கூடிய போக்குவரத்து ஊழியர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் சங்கம், மின்சார ஊழியர் சங்கம், ஆட்டோ சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தொமுச நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் தொமுச போக்குவரத்து தொழிற் சங்கத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அங்கிருந்த திமுக தொண்டர்கள் உடனடியாக அவரை மீட்டனர்.

தீக்குளிக்க முயன்ற ஊழியரை தடுத்து நிறுத்தும் திமுகவினர்
தொமுச நிர்வாகிகள் சிலர் சங்கப் பிரச்சினை காரணமாக தன்னை பணிமாறுதல் செய்திருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் தொழிற்சங்கத்திற்குள் இருக்கக்கூடிய பிரச்சினை காரணமாகவே அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து தன்னை வேறு இடத்துக்கு மாறுதல் செய்ய வைத்திருப்பதாகவும் அவர் கூறினார். திமுக நிர்வாகிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொமுச போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரமேஸ்வரன் அப்போது தெரிவித்துள்ளார். இந்த தற்கொலை முயற்சி சம்பவம் காரணமாக திமுக அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

No comments