புதுடில்லி: முன்னாள் கிரிக்கெட் வீரரும், டில்லி கிழக்கு தொகுதி எம்.பி.,யுமான பா.ஜ.,வின் கவுதம் காம்பீர் தீவிர அரசியலில் இருந்து விலகி கிரிக்கெட் தொடர்பான பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளார். தன்னை அரசியல் பணிகளில் இருந்து விடுவிக்க பா.ஜ., தலைவர் நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர். கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் அரசியலில் இணைந்த அவர் பா.ஜ., சார்பில் டில்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு 6.95 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும் வரும் தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ‛ எக்ஸ் ‘ சமூக வலைதளத்தில் கவுதம் காம்பீர் வெளியிட்ட பதிவு ஒன்றில் கூறியுள்ளதாவது:
அரசியல் தொடர்பான பணிகளில் இருந்து விடுவிக்கும்படி பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இதன் மூலம் கிரிக்கெட் தொடர்பான பணிகளில் என்னால் கவனம் செலுத்த முடியும். மக்களுக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்பு அளித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
