எண்ணூர் அமோனியா வாயுக் கசிவு தொடர்பாக, கோரமண்டல் நிறுவனத்திடம் இருந்து 5.9 கோடி ரூபாய் நிவாரணம் கோரப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை எண்ணூரில் கடல் பரப்பிலிருந்து கோரமண்டல் ஆலைக்கு கடலுக்கு அடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 26-ம் தேதி நள்ளிரவில் வாயு வெளியேறியது. இதனால் ஆலைக்கு அருகே உள்ள சின்னக்குப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், சர்மா நகர் உள்ளிட்ட 8 கிராமங்களில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சு திணறல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட 52 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் கோரமண்டல் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
சுமார் 30 நாட்களுக்கு மேலாக இந்தப் போராட்டம் தொடர்ந்த நிலையில், அமோனியா வாயுக் கசிவு தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது கோரமண்டல் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அது கடவுளின் செயல் எனவும், வாயு கசிவு தவறுதலாக ஏற்பட்டதாகவும் வாதிட்டனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்த தேசிய பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர்கள், இந்த அமோனியா வாயு கசிவு ஏற்படுவதற்கு காரணம் கோரமண்டல் தொழிற்சாலை என்பது தெரிய வருவதாக தெரிவித்தனர். இருப்பினும் எதனால் அந்த கசிவு ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது என்ற விரிவான அறிக்கையை மார்ச் மாதம் 5-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தினர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
இந்நிலையில் இது தொடர்பாக பேரவையில் இன்று மதிமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. இதற்கு பதில் அளித்துப் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், “எண்ணூர் வாயு கசிவு விவகாரம் தொடர்பாக கோரமண்டல் நிறுவனத்திடம் 5.9 கோடி ரூபாய் நிவாரணம் கேட்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

