தெலங்கானாவில் பெண் பொறியாளர் ஒருவர் 84 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கையும், களவுமாக சிக்கினார். இதனால் அவர் கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் அவரது வீட்டில் இருந்து 4 கிலோ தங்கம், 65 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்கி சிக்கிய பெண் அதிகாரி ஜெகத் ஜோதி.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பழங்குடியினர் நலப் பொறியாளர் அலுவலகத்தில் நிர்வாக பொறியாளராக பணியாற்றுபவர் ஜெகத் ஜோதி. விடுதிக் கட்டிடம் கட்டுவதற்கும், அதற்கான பணிக்கான பில்களை சமர்பிப்பதற்கும் ஒப்பந்ததாரரிடம் அவர் 84 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒப்பந்ததாரர், ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
அவர்கள் தந்த ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய 84 ஆயிரம் ரூபாயை, நிர்வாக பொறியாளர் ஜெகத் ஜோதியிடம் நேற்று வழங்கினார். அதை ஜெகத் ஜோதி வாங்கும் போது கையும், களவுமாக அவரை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் அவர் கதறி அழுதார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், ஜெகத் ஜோதிக்கு ஃபீனால்ப்தலீன் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் அவர் லஞ்சம் வாங்கியதும் உறுதியானது.
இதற்கிடையில், ஏசிபி இயக்குநர் ஜெனரல் சி.வி.ஆனந்த் நேற்று நள்ளிரவு வெளியிட்ட அறிக்கையில், “ ஜெகத் ஜோதியிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அடிப்படையில், அவரது வீட்டில் இருந்து ரூ.65 லட்சம் ரொக்கம் மற்றும் 4 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. இது ஒரு பொறியாளரிடம் இருந்து சமீபத்தில் மீட்கப்பட்ட பெரும் தொகையாகும்” என்று கூறினார்.

கைது செய்யப்பட்ட ஜகத் ஜோதி அழுது புரண்டாலும் எந்த பிரயோஜனமும் கிடையாது லஞ்ச ஒழிப்பு துறையினர் பாவம் பார்க்காமல் இந்த நபருக்கு அதிகபட்ச தண்டனையை வாங்கி தர வேண்டும். இந்த நாடும் நாட்டு மக்களும் சீரழிவதற்கு முக்கிய காரணம் இந்த லஞ்சமும் ஊழலுமே