தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த தீர்ப்பானது பணத்தாள்களை விட வாக்குகளின் சக்தியை வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளது.
தேர்தல் பத்திரத் திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகக் கூறி உச்ச நீதிமன்றம் இன்று அதை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மோடி அரசின் தேர்தல் பத்திரத் திட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களையும், இந்திய அரசியலமைப்பையும் மீறுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் பத்திரங்களை அரசியலமைப்புக்கு விரோதமானது என்று அறிவிக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. இந்த தீர்ப்பு பணத்தாள்களை விட வாக்குகளின் சக்தியை வலுப்படுத்தும்.

தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து
மோடி அரசு சந்தாதாரர்களுக்கு (தேர்தல் பத்திரம் மூலம் நிதி வழங்குபவர்கள்) சிறப்பு உரிமைகளையும் விலக்குகளையும் வழங்கி வருகிறது. அதே நேரத்தில் அன்னதத்தாக்களுக்கு (விவசாயிகள்) அநீதி இழைக்கப்படுகிறது.
வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை சோதனை (விவிபிஏடி) பிரச்சினையில் அரசியல் கட்சிகளைச் சந்திக்க தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம். வாக்குப்பதிவு நடைமுறையில் எல்லாம் வெளிப்படையாகவும், தெளிவாகவும் இருந்தால், அரசியல் கட்சிகளை சந்திக்க தேர்தல் ஆணையம் ஏன் நேரம் கொடுக்கக்கூடாது?. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் சரியானது வரவேற்கப்பட வேண்டியது