அயோத்தி ராமர் கோயில் கட்டியதில் பிரதமர் மோடியின் பங்களிப்பு பூஜ்ஜியம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ரூ.1800 கோடி செலவில் பிரம்மாண்டமாக புதிய ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் சிலை பிரதிஷ்டை விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவில் முதன்மை விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இதற்காக அவர் 11 நாள் விரதமிருந்து வருவதுடன், கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் உள்ள ராமாயண சிறப்பு வாய்ந்த ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டும் வருகிறார்.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் பிரதமர் மோடியின் பங்களிப்பு பூஜ்ஜியம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை தான் கட்டியதாக பிரதமர் கூறிக்கொள்கிறார். அயோத்தி ராமர் கோயிலில் அவரது பங்களிப்பு பூஜ்ஜியம் தான். அதற்கு பதிலாக மோடி தனது வாரணாசி தொகுதியில் கவனம் செலுத்த வேண்டும். அங்கு ஞானவாபி ஜோதிர்லிங்க காசி கோயில் மீண்டும் கட்டப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
ராம பக்தர்களின் பல ஆண்டு கனவான அயோத்தி ராமர் கோயில், மோடியின் ஆட்சியில் நிறைவேறியுள்ள நிலையில், இந்த கோயில் கட்டியதில் பிரதமர் மோடியின் பங்களிப்பு பூஜ்ஜியம் என பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

