போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்,15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளன. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் அதை எதிர்கொள்ள தயார் என அறிவித்திருந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்களான அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையிலான தொழிற்சங்கங்கள் மற்றும் ஏஐடியுசி, சிஐடியு தலைமையிலான போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று இரவு 12:00 மணி முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விரைவில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் ஏராளமான மக்கள் வெளியூர்களுக்கு செல்லும் சூழலில் பேருந்துகள் நிறுத்தப்படுவது மூலம் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாவர். தொழிலாளர்களின் கோரிக்கையை சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

