கோவை குறிச்சி குளக்கரையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நாளை திறந்து வைக்கிறார்.
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாநகராட்சியில் உள்ள 7 குளங்கள் சீரமைக்கப்பட்டு அழகுபடுத்தபட்டுள்ளன. அத்துடன், குளக்கரைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

தூய்மை பணி நடைபெறுகிறது.
இதில் தமிழ் எழுத்துகளைக் கொண்டு சுமார் 2.5 டன் எடையில், இரும்பால் 20 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த திருவள்ளுவர் சிலையை நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நாளை திறந்து வைக்கிறார்.
இதனையடுத்து திருவள்ளூவர் சிலை மற்றும் அந்த குளத்தினைச் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

குறிச்சி குளக்கரை பகுதிகளிலும் தூய்மைப்பணிகள் நடைபெறுகிறது.
கோவை பெரிய குளம் மற்றும் வாலாங்குளம் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களில், கழிவு இரும்பில் செய்யப்பட்ட சிலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இது கோவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் குமாரசாமி குளக்கரையில் பிரம்மாண்ட கொரில்லா சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிதாக இல்லாத கோவை மாநகரில் தற்போது இந்த குளக்கரைகள் அதிகளவில் மக்களை ஈர்க்கும் இடங்களாக மாறி வருகிறது.
வார இறுதி நாட்களில் குளக்கரைகளில் கூடும் மக்கள், இந்த பூங்காக்களின் குடும்பத்தினருடன் தங்களது நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள புதிய திருவள்ளுவர் சிலை, கோவை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

