புதுடில்லி: போர்பந்தரில் இருந்து 217 கடல்மைல் தொலைவில், அரபிக் கடலில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்தது. இதையடுத்து வணிக கப்பலில் தீப்பற்றியது. உதவிக்கு கடலோர காவல் படை கப்பலில் அதிகாரிகள் விரைந்தனர்.
அரபிக்கடலில் சவுதியில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்தது. இந்த சம்பவம் போர்பந்தரில் இருந்து 217 கடல்மைல் தொலைவில் நடந்துள்ளது. கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட தகவலை அடுத்து கடலோர காவல் படையினர் உதவிக்கு விரைந்தனர்.
தீ அணைக்கப்பட்ட நிலையில் 20 இந்தியர்கள் உட்பட கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தீ பற்றியதால் கப்பலை இயக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு இந்திய கடற்படை போர்க்கப்பலும் விரைகிறது.
இது குறித்து கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: சவுதி அரேபியாவில் உள்ள துறைமுகத்தில் இருந்து மங்களூருக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடந்து வருவதாக தகவல் கிடைத்தது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல்படை கப்பலில் அதிகாரிகள் ஆபத்தில் சிக்கி உள்ள வணிகக் கப்பலுக்கு உதவ புறப்பட்டு சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

