சாட்டிலைட் இணையச் சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரத்திற்கு ஏலம் முறைக்கு பதிலாக உரிமம் முறையை பின்பற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், அதனை திமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சருமான ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதிய தொலைத்தொடர்பு மசோதா – 2023 நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. சாட்டிலைட் இணைய சேவைகளுக்கு ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்க ஏலத்திற்கு பதில் லைசென்ஸ் வழங்கும் முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவை இணையச் சேவை வழங்கும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், அமேசானின் ப்ராஜெக்ட் கைப்பர் போன்ற அதன் உலகளாவிய இணைநிறுவனங்கள் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்படும் ஒன்வெப் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.
ஆனால் இது இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை விநியோகத்தைப் போல, ஏல முறையே சரியானதாக இருக்கும் என்று கூறுகிறது.

லைசென்ஸ் முறையில் குறைந்த செலவில் வெளிநாட்டு இணைய சேவை நிறுவனங்களால் வாய்ஸ் கால் மற்றும் இணையச் சேவையை தர முடியும் என்பதால் இது சமமான போட்டியை உருவாக்காது என்றும் ஏலம் முறையே சமநிலையை பராமரிக்கும் என்றும் ஜியோ கூறுகிறது.
இந்நிலையில் ஏலத்துக்கு பதில் உரிமம் வழங்க இருப்பது மசோதாவின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆ.ராசா, “அலைக்கற்றை ஏலம் விடப்படவில்லை என்று என்னை எள்ளி நகையாடிய கோமாளிகள் இப்போது என்ன செய்கிறார்கள் என்று இந்த தேசம் பேசட்டும்!. எலும்புத் துண்டுகளுக்கு இரையாகாத ஊடகங்கள் இருந்தால் இப்போதாவது ஏசட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆ ராசா இருந்தபோது, 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாமல், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற வகையில் வழங்கப்பட்டது. இதில் 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக ராசா மீது குற்றம்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் தானே வாதாடி அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ஏலம் விடப்படவில்லை என்று தன்னை விமர்சித்தவர்கள் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்? என்று ஆ.ராசா எழுப்பி இருக்கும் கேள்வி இந்திய அளவில் பெரும் விவாத பொருளாகி இருக்கிறது.

