புதுடில்லி: ‛‛ சில சம்பவங்களால் இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு சீர்குலைந்து விடாது ” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமை பெற்றுள்ள காலிஸ்தான் பயங்கரவாதியும், ‘நீதிக்கான சீக்கியர் அமைப்பின்’ தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னுனை நியூயார்க்கில் கொலை செய்ய இந்திய அதிகாரியுடன் இணைந்து முயன்றதாகவும், அதற்காக ஒரு ஆளை வாடகைக்கு அமர்த்தியதாகவும் நிகில் குப்தா என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. செக் குடியரசின் பராக் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிகில் குப்தா அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி, பிரிட்டன் நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இந்த விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மோடி அளித்த பதில்: இது தொடர்பாக ஆய்வு செய்யப்படும். ஆனால், ஒரு சில சம்பவங்களால் இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு சீர்குலைந்து விடாது. எங்களுக்கு, யாராவது தகவல் அளித்தால் அது குறித்து ஆய்வு செய்வோம். எங்களது குடிமக்கள் நல்லது அல்லது கெட்டது என எதை செய்திருந்தாலும் அது பற்றி ஆய்வு செய்ய தயாராக உள்ளோம். சட்டத்தின் ஆட்சி நடப்பதில் உறுதியாக உள்ளோம். எவ்வாறாயினும் இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கு இரு தரப்பிலும் வலுவான ஆதரவு காணப்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

