புதுடில்லி: மஹாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியின் உரிமையாளர் ரவி உப்பல், துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர், அவரது நண்பர் ரவி உப்பால் ஆகியோர் மஹாதேவ் எனும் பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர். இந்த செயலியில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.417 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.5,000 கோடி அளவுக்கு பணமோசடி நடந்திருப்பதாக கூறப்படும் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மஹாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியின் உரிமையாளர்களில் ஒருவரான ரவி உப்பல் (43) துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

