புதுடில்லி: ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க இந்தியா திட்டமிட்டு உள்ளதா என பார்லிமென்ட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கான பதிலில் தான் கையெழுத்திடவில்லை என மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி கூறியுள்ளார்.
ஹமாஸ் தொடர்பாக பார்லிமென்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில் மீனாட்சி லேகியின் பெயருடன் கூடிய ஆவணம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பரவியது.
இதனை மறுத்து மீனாட்சி லேகி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: “உங்களுக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி தொடர்புடைய எந்த ஆவணத்திலும் நான் கையெழுத்திடவில்லை. இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் பதில் அளிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு எக்ஸ் பதிவில் “குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை இணையத்தில் இது தொடர்பாக கிடைக்கும் ஆவணத்தில், லோக்சபா எம்.பி., கே. சுதாகரன் எழுப்பிய கேள்விக்கு மீனாட்சி லேகி பதில் அளித்துள்ளார். அதுவும் நேரடியாக இல்லாமல், குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பு சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 அல்லது உபா சட்டம் (Unlawful Activities (Prevention) Act (UAPA), கீழ் தீவிரவாத அமைப்பாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

