புதுடில்லி: கர்நாடகா, மஹாராஷ்டிராவில் 44 இடங்களில் இன்று(டிச.,09) தேசிய புலனாய்வு அமைப்பினர் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ள சிலர் கர்நாடகா, மஹாராஷ்டிராவில் வசித்து வருவதாக என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைந்துள்ளது. அதன் படி, கர்நாடகா, மஹாராஷ்டிராவில் 44 இடங்களில் இன்று(டிச.,09) என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மஹாராஷ்டிராவில் தானே நகரம், மீரா பயந்தர் ஆகிய பகுதிகளில் சோதனை நடந்தது.
44 இடங்களில் நடந்த சோதனையில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவின் கோட்பாடுகளை இந்தியாவில் பரப்ப முயற்சித்துள்ளனர் என்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் ஐஇடி வெடிப்பொருட்களை தயாரிப்பதிலும் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

