பத்திரிக்கை உலகில் பலருக்கு ஆசானாக விளங்கிய சோ ராமசாமி , அரசியல் விமர்சகர் என்பதில் பெயர் பெற்றவர். பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர் சோ.துக்ளக். பத்திரிக்கையின் ஸ்தாபகரான இவர் அதில் எழுதிய அரசியல் கட்டூரைகள் பிரபலமானவை. நையாண்டி கட்டூரைகளை எழுதுவதில் வல்லவர். சாதாரணமாக பேசும்போதே நகைச்சுவையும் நையாண்டியும் இவரது வார்த்தைகளில் வந்து விழும் . அரசியல் நையாண்டி’ எழுத்துக்கள் இவருக்கு ‘பத்திரிக்கை உலகில்’ தனி இடம் வகுத்து தந்தது.
சிறிது காலமாகவே நோய் வாய்ப்பட்டிருந்த சோ ராமசாமி பலமுறை மரணத்தின் விளிம்பை தொட்டு வந்தார். ஒரு முறை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை முதல்வர் ஜெயலலிதா சென்று பார்த்தார், அதன் பின்னர் உடல் நலம் தேறி வந்த அவர் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அதே அப்போலோவில் மீண்டும் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரம் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் கடந்த கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி முதல்வர் உயிருக்கு போராடும் செய்தி கேட்டு இவரது உடல்நலமும் பாதிக்கப்பட்டது. உடனடியாக ஐசியூவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இதே 7ம் தேதி காலமானார்.
முன்னதாக துக்ளக்கில் வெளிவரும் `கேள்வி – பதில்’ பகுதிக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் தவறாமல் பதில்களைக் கொடுத்துவிடுவார் சோ. வேலைகள் இருந்தால் மட்டுமே வியாழக்கிழமை வரை தள்ளிப் போகும். ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சையில் இருந்தபோது சோவும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அவர் இறப்பதற்கு முன்புகூட, துக்ளக் கேள்வி-பதில்களை கொடுத்துவிட்டுத்தான் போனார். தனது மருமகள் சித்ராவை அழைத்து வாசகர் கேள்விகளுக்கு பதில்களைக் கொடுத்திருக்கிறார். துக்ளக் ஆரம்பித்த காலத்திலிருந்து கேள்வி – பதில் பகுதி கடைசி நேரத்தில் பிரின்டுக்குப் போன வரலாறு கிடையாது. அதுதான் முதல்முறை. உடல்நலம் குன்றி வீட்டில் இருந்த காலகட்டத்தில்கூட ஒவ்வொரு இதழும் அவரின் பார்வைக்குப் போய் ஓகே ஆனபிறகுதான் பிரின்ட்டுக்கே போகும்.
அப்படித்தான் அவர் இறப்பதற்கு முன்பு வெளியான துக்ளக் இதழை ரெடி செய்துவிட்டு எடிட்டரிடம் ஓகே’ வாங்க சப் எடிட்டர்கள் 2016 டிசம்பர் 4-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று அப்போலோ போனார்கள். அதே தினத்தில்தான் ஜெயலலிதா சீரியஸ் எனச் செய்திகள் பரவின. ``நிறைய கெடுபிடிகள் சார்... நாங்க போராடித்தான் இங்கே வந்தோம்’’ என சோவிடம் சொல்லியிருக்கிறார்கள் சப்- எடிட்டர்கள். ``யாராவது வி.ஐ.பி-க்கள் வருகிறார்களா என்ன?’’ எனக் கேட்டுவிட்டுப் பக்கங்களைப் பார்த்து திருத்தங்களைச் சொல்லியிருக்கிறார் சோ. ``கடைசி நேரத்தில் பதில்களை கொடுத்திருக்கீங்க... வழக்கம் போல இருந்தது சார்’’ என சப் எடிட்டர்கள் சொல்ல, ``அப்ப இம்ப்ரூவ்மென்டே இல்லை என்கிறீர்களா?’’ என இரட்டை அர்த்தத்தில் கேட்டுவிட்டு, ``சோவின் கேள்வி பதில்கள் வருவதை போஸ்டரில் போடுங்க’’ எனவும் சொல்லியிருக்கிறார்.சோவின் கேள்வி பதில்கள்’ அதுவரை போஸ்டரில் வந்ததே கிடையாது. “அவ்வளவுதான் சார்… இனிமேல் என்ன இருக்கு சார்’’ என்றபடியே சப் எடிட்டர்களை அனுப்பி வைத்திருக்கிறார் சோ.
“இம்ப்ரூவ்மென்ட் இல்லையா?’’ என அவர் எதற்காகக் கேட்டார் எனத் தெரியவில்லை. அதன்பிறகு அவரின் உடல்நிலையில் முன்னேற்றமே இல்லாமல் போய்விட்டது. உடனே ஐ.சி.யூ-வுக்கு சோ மாற்றப்பட்டார். அதே நேரம் ஜெயலலிதாவின் உடல்நிலையும் சீரியஸ் ஆகிக் கொண்டிருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டு பேரின் உயிர்களும் போராடிக் கொண்டிருந்தன. ஜெயலலிதா உயிர் பிரிந்தபோது அந்தச் செய்தி சோவின் நினைவுக்குப் போய்ச் சேரவில்லை. அடுத்த 30 மணி நேரத்தில் சோவின் உயிரும் அவர் உடலைவிட்டுப் பிரிந்து போனது.


மிகவும் சிறந்த திறமையான தைரியமான பத்திரிகையாளர் திரு சோ அவர்களின் மறைவு தினம் இன்று இவர் அரசியல்வாதிகளின் நிலையைப் பற்றி தங்கப்பதக்கம் என்கிற படத்தில் மிகச் சிறப்பாக வெளிக்காட்டி இருந்தார் அதை யாரும் இன்னும் மறக்கவில்லை