உத்தர்காசி: உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 41 பேரின் உறவினர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். சிக்கியுள்ளவர்களை மீட்பு பணியில் இந்திய ராணுவம் இணைய உள்ளது. தற்போது வரை 8 மீட்டர் வரை துளையிடப்பட்டுள்ளது.

உத்தரகண்டின், சில்க்யாரா – தண்டல்காவ்ன் இடையே உள்ள மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் போது, கடந்த 12ம் தேதி சுரங்கம் இடிந்து விழுந்ததில், 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி கடந்த 14 நாட்களாக முழுவீச்சில் நடந்து வருகிறது.

இடிபாடுகள் குவியலில் பல இடங்களில் இரும்பு கம்பிகள், பாறைகள் அதிகம் இருந்ததால், இயந்திரம் பழுதடைந்தது. பழுது நீக்கப்பட்டு நேற்று பணிகள் துவங்கின. ஆனால், இரும்பு குழாய்க்குள் சிக்கி, அந்த இயந்திரம் முழுதும் சேதமடைந்துள்ளது. துளையிடும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாற்று திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

காத்திருப்பு
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 41 பேரின் உறவினர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. உயிருடன் மீண்டு வர வேண்டும் என தொழிலாளர்களின் உறவினர்கள் காத்திருக்கும் புகைப்படங்கள் கண் கலங்க வைக்கிறது.
தொலைபேசி பூத்
சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய உள்ள தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேச வசதியாக சுரங்கப்பாதை தளத்தில் சிறிய தொலைபேசி பூத் பி.எஸ்.என்.எல்., அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

