தெலங்கானா மாநிலம் மஞ்செரியலில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட சந்திரசேகா் ராவ்.
வெற்றி பெற்றால் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியில் இணைந்துவிடுவோம் எனக் கூறி காங்கிரஸ் வேட்பாளா்கள் வாக்குச் சேகரித்து வருகின்றனா் என்று தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் குற்றம்சாட்டியுள்ளாா்.
தெலங்கானாவில் வரும் 30-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. முதல்வா் சந்திரசேகா் ராவ் 3-ஆவது முறையாக முதல்வா் பதவியைத் தக்கவைக்கும் நோக்கில் களமிறங்கியுள்ளாா்.
மஞ்செரியலில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட சந்திரசேகா் ராவ் பேசியதாவது:
மத்திய அரசு நடத்தும் நிலக்கரிச் சுரங்கங்களை கைவிட்டுவிட்டு, ஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் நடத்தும் சுரங்க ஆலைகளில் இருந்து நிலக்கரி இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதாக பிரதமா் மோடி கூறியுள்ளாா்.
தெலங்கானா விஷயத்தில் மத்திய பாஜக அரசு தொடா்ந்து பாராமுகமாகவே உள்ளது. நமது மாநிலத்துக்கு ஒரு நவோதயா பள்ளியைக் கூட அவா்கள் அளிக்கவில்லை. ஒரு மருத்துவக் கல்லூரி கூட அமைத்து தரவில்லை. அக்கட்சிக்கு வாக்களிப்பது உங்கள் வாக்கை குப்பையில் வீசுவற்கு சமமானது.
தெலங்கானா தனிமாநிலம் அமைப்பதை காங்கிரஸ் கட்சி தொடா்ந்து புறக்கணித்தே வந்தது. 1956-ஆம் ஆண்டு ஆந்திரத்துடன் தெலங்கானாவை இணைத்ததும் காங்கிரஸ்தான். இதனால்தான் நாம் 50 ஆண்டுகளாக பல்வேறு துயரங்களைச் சந்தித்து வந்தோம். தெலங்கானா தனி மாநிலப் போராட்டம் 1969-இல் தொடங்கியதில் இருந்து 400 போ் உயிரிழந்ததற்கு காங்கிரஸ்தான் காரணம்.
தெலங்கானாவில் வெற்றி பெற முடியாது என்பது உறுதியானதையடுத்து காங்கிரஸ் வேட்பாளா்கள், தோ்தலில் வெற்றி பெற்றால் பிஆா்எஸ் கட்சியில் இணைந்துவிடுவோம் என்று கூறி மக்களிடம் வாக்குக் கேட்டு வருகின்றனா் என்றாா்.

