புதுடில்லி: புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகளின், ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள மாணவர் அமைப்புகள், ஜன. 12ல் பார்லிமென்டை முற்றுகையிட முடிவு செய்துள்ளன.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பா.ஜ.,வை வீழ்த்தும் நோக்கில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க., உட்பட 28 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் உள்ள மாணவர் அமைப்பினரின் ஆலோசனைக் கூட்டம் புதுடில்லியில் நேற்று நடந்தது.
இதில், தேசிய கல்வி கொள்கை 2020க்கு எதிராக வரும் ஜன., 12ம் தேதி பார்லிமென்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள அகில இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட, 16 மாணவர் அமைப்பினர் சார்பில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவர் அமைப்பு நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘பள்ளி கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவச கல்வியை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தேசிய வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக நாடு முழுதும் பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுடில்லியில் அடுத்த மாதம் 12 அன்றும், சென்னையில் பிப். 1 அன்றும் பேரணி மற்றும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

