புதுடில்லி: தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில், வாகன சோதனையின் போது கணக்கில் காட்டாத, ரூ.1,760 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் நவ.,25ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை பல்வேறு அரசியல் கட்சிகளால் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.1760 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள், போதைப் பொருட்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.1760 கோடி பறிமுதல்
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 5 மாநிலங்களில் நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 5 மாநிலங்களில் இருந்து ரூ.1,760 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தெலுங்கானாவில் ரூ.659 கோடியும், சத்தீஸ்கரில் 76 கோடியும், மத்திய பிரதேசத்தில் 323 கோடியும், ராஜஸ்தானில் ரூ.650 கோடியும், மிசோரத்தில் ரூ.49 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களை ஒப்பிட்டால் 7 மடங்கு அதிக பணம், பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

