ஹைதராபாத்: சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டீரிய சமிதிக்கு (பி.ஆர்.எஸ்) – வி.ஆர்.எஸ்.,(ஓய்வு) கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என தெலுங்கானாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசினார்.
தெலுங்கானாவில் நடந்த தேர்தல் பேரணியில் அமித் ஷா பேசியதாவது: காங்கிரஸ் மற்றும் பாரத் ராஷ்டீரிய சமிதி ஆகிய இரண்டு கட்சிகளும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானவர்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பாஜ., வால் மட்டுமே நல்லது செய்ய முடியும். பாஜ., அரசு மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும், ஓபிசி மற்றும் எஸ்.டி., இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும். தாமரைக்கு வாக்களியுங்கள். அயோத்தியில் அனைவருக்கும் ராமர் கோயிலை இலவசமாக தரிசனம் செய்ய பாஜ., அரசு ஏற்பாடு செய்யும்.
ஏ.ஐ.எம்.ஐ.எம்., பிஆர்எஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 2ஜி, 3ஜி, 4ஜி கட்சிகள் ஆகும். 2ஜி என்பது இரண்டு தலைமுறைகளாக ஆட்சியை நடத்தும் கேசிஆர் மற்றும் கேடிஆர். 3ஜி கட்சி தான் ஏ.ஐ.எம்.ஐ.எம்.
காங்கிரஸ் 4ஜி கட்சி. முதலில் ஜவஹர்லால் நேரு, 2வது இந்திரா, 3வது ராஜிவ், இப்போது 4வது தாக ராகுல். தெலுங்கானாவில் பாஜ., ஆட்சி அமைத்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முதல்வரைத் தேர்ந்தெடுப்போம். சந்திரசேகர ராவ் தன் மகனை முதல்வராக்க விரும்புகிறார். சோனியா ராகுலை பிரதமராக்க விரும்புகிறார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

