ராஞ்சி :ஜார்க்கண்டில், கணவர் மீது புகார் அளிப்பதற்காக பிரதமர் மோடியின் கார் முன் பாய்ந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பாதுகாப்பு குறைபாட்டுக்கு காரணமான, மூன்று போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக கடந்த 14ல் ஜார்க்கண்ட் வந்தார். முதல் நாள், 10 கி.மீ., துாரத்துக்கு சாலையில் ஊர்வலமாக வந்து மக்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான பிர்ஸா முண்டாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.குந்தி மாவட்டத்தின், உலிஹது கிராமத்தில் உள்ள பிர்ஸா முண்டாவின் பூர்விக வீட்டுக்கு பிரதமர் சென்றார்.
முன்னதாக, ராஞ்சியின் ஜெயில் சவுக் பகுதியில் உள்ள பிர்ஸா முண்டா நினைவு பூங்கா மற்றும் அருங்காட்சியகத்துக்கு பிரதமர் காரில் சென்று கொண்டிருந்தபோது, சாலை ஓரத்தில் நின்றிருந்த பெண், திடீரென பிரதமர் காரை மறித்தபடி குறுக்கே புகுந்தார். இதனால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது கிடைத்த தகவல் குறித்து ராஞ்சியின் மூத்த எஸ்.பி., சந்தன்குமார் ஜா கூறியதாவது: அந்த பெண்ணின் பெயர் சங்கீதா ஜா. இவருக்கும், அவரது கணவருக்கும் இடையே 2016 முதல் பிரச்னை இருந்து வருகிறது. அவரது கணவரின் மாத சம்பளத்தை தன் வங்கி கணக்கில் வரவு வைக்க விரும்பிய அந்த பெண், இது தொடர்பாக பிரதமரை சந்தித்து மனு கொடுக்க, கடந்த அக்டோபர் மாதம் புதுடில்லிக்கு சென்றுள்ளார்.
அங்கு, 10 நாட்கள் தங்கியிருந்து பிரதமரை சந்திக்க முயற்சித்துஉள்ளார்.முயற்சிகள் தோல்விஅடைந்ததை அடுத்து, ஜனாதிபதியை சந்திக்க முயன்றுள்ளார். அதுவும் பலன் அளிக்காததால், சொந்த ஊருக்கு திருப்பிவிட்டார்.
பிரதமர் ஜார்க்கண்ட் வருவதை அறிந்து, கடந்த 14ல் நடந்த ஊர்வலத்தின் போது பிரதமரை சந்திக்க முயன்றுஉள்ளார். பின், கவர்னர் மாளிகைக்கு முன்தினம் வந்துஉள்ளார். பிரதமரை சந்திக்க முடியாமல் போன ஏமாற்றத்துடன் திரும்பிய போது, பிரதமரின் கான்வாய் அந்த வழியாக வருவதை பார்த்து குறுக்கே பாய்ந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பு குறைபாடுக்கு காரணமான, உதவி எஸ்.ஐ., அபு ஜபர், கான்ஸ்டபிள்கள் சோட்டேலால் துடு மற்றும் ரஞ்சன் குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.


Super wife