கோப்புப்படம்
பெண்கள் குறித்துப் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பிகார் முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று(செவ்வாய்க்கிழமை) சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டு முதல்வர் நிதீஷ்குமார் பேசினார்.
அப்போது ,’படித்த பெண் ஒருவர் திருமணம் செய்துகொள்ளும்பட்சத்தில், கணவருடன் இருக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியும். பெண்கள் படிப்பதன் மூலம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியும். பிகாரில் பெண்களின் கல்வியறிவு அதிகரித்துள்ளது. இதனால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. முன்பு பிகாரில் குழந்தை பிறப்பு 4.3 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 2.9 சதவீதமாக குறைந்திருக்கிறது’ என்று பேசினார்.
இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த பெண்கள் கல்வி முக்கியம் என்று பேசிய நிதீஷ் குமாரின் பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் நிதீஷ் குமாரை பாஜக எம்எல்ஏக்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நிதீஷ் குமார், ‘நான் தவறாகப் பேசியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகளால் யாரேனும் காயப்பட்டிருந்தால் அந்த வார்த்தைகளை நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்’ என்று கூறினார்.
