தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன், பொதிகை உள்ளிட்ட பிற ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மதுரையில் இருந்து காலை 7.10க்கு புறப்படும் வைகை அதிவிரைவு ரயில், நாளை முதல் காலை 6.40 மணிக்குப் புறப்பட உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக இயங்குவதுபோல் காட்டுவதற்காக எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் ரெயில்களின் புதிய பயண நேரப்படி மதுரை-சென்னை மார்க்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் 15 நிமிடங்கள் அதிகமாகவும், பாண்டியன் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் பயண நேரம் 10லிருந்து 15 நிமிடங்கள் வரையும் அதிகரிக்கப்படுகிறது.
‘வந்தே பாரத்’ ரெயிலின் பயண நேரம் (சென்னை-மதுரை) 5 மணி 50 நிமிடங்களாகவும், பிற அதி விரைவு (Super Fast) ரெயில்களின் பயண நேரம் 7 மணி 45 நிமிடங்கள் எனவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பத்து வருடங்களுக்கு முன்பு, சதாப்தி ரெயில்களில் பயணிப்பதை ஊக்குவிக்க அதே தடத்தில் பிற ரெயில்களின் பயண நேரங்களை அதிகரிக்க செய்த முயற்சியை போலவே பயணிகளால் இது பார்க்கப்படுகிறது.
பெரும் பொருட்செலவில் ரெயில் பாதைகளை மேம்படுத்தி விட்டு அதன் பயன் மற்ற அதி விரைவு ரெயில் பயண கட்டணங்களை விட பலமடங்கு அதிகமுள்ள ரெயில்களுக்கு மட்டுமே பலனளிக்கும் வகையில் மாற்றியமைத்திருப்பது ஒரு வகையில் மக்களை ஏமாற்றும் வேலை என ரெயில் பயணிகள் விமர்சிக்கின்றனர்.
K.பாலச்சந்தரின் இரு கோடுகள் படத்தில் ஒரு கோட்டைசிறிதாக காட்ட பக்கத்தில் ஒரு பெரிய கோடு போடுவார். அதுபோல வந்தே பாரத் ரயிலின் வேகத்தை அதிகப்படுத்த முடியாமல் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை குறைக்கின்றனர். ஏற்கனவே எல்லா ரயில்களும் தாமதமாகத்தான் சென்றடைகின்றனர், மேலும் வேகத்தை குறைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களை தாமதப்படுத்துவது பயணிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்துகிறது.

