அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி உடல்நலம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாணவியின் சிகிச்சைக்கு உதவுமாறு அரசுக்கு அவரது தாயின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துக்குட்டி கிராமத்தை சேர்ந்த டேவிட்ராஜ் – ஜெனிபரின் மகள் திருப்பூர் செரங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த 5 ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி, அங்கு கழிவறைக்கு சென்ற போது கழிப்பறையின் கூரையில் இருந்து அறுந்து தொங்கிய வயரில் இருந்து மின்சாரம் தாக்கியுள்ளது.
இதில் தூக்கி வீசப்பட்ட மாணவிக்கு முழங்கை எலும்பு மற்றும் தோள்பட்டை எலும்பு முறிவு ஏற்பட்டது. கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 நாட்கள் சிகிச்சைக்கு பிறகும் சரியாக காது கேட்காததால், மாணவியின் பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது காதுகள் பாதிக்கப்பட்டு விட்டதால், 90 சதவீத கேட்கும் திறனை இழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
அரசுப் பள்ளியின் அஜாக்கிரதை காரணமாக மின்சாரம் தாக்கி சிறுமிக்கு அடிபட்ட நிலையில், அரசோ, பள்ளி நிர்வாகமோ உதவ முன்வரவில்லை எனவும், தனது மகளின் சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் எனவும் அவரது தாய் ஜெனிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மாநகராட்சிப் பள்ளி நிர்வாகம் அஜாக்கிரதையாக இருந்து விட்டு, தனது மகளை குறை சொல்வதாகவும், மகளுக்கு முழங்கை, தோள்பட்டை எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் கழுத்திலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. காதுகள் 90 சதவீதம் கேட்கும் திறனை இழந்து விட்டது.
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் தனியார் மருத்துவமனையில் மாணவியை சேர்த்து சிகிச்சை அளிக்கும் அளவுக்கு தங்களிடம் வசதி இல்லாததால் தமிழ்நாடு அரசு சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று ஜெனிபர் கோரிக்கை விடுத்துள்ளார். இது போன்ற கோரிக்கைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உடனடியாக செவிமடுத்து உரிய நடவடிக்கை எடுக்கிறார் என்பதால் தன் மகளுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என அந்த தாய் காத்திருக்கிறார். கண்டுக்கொள்ளுமா அரசு?


முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து கருணைத்தொகை வேண்டி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம் அதனுடன் நஷ்ட ஈடு கேட்டு இலவச வழக்கறிஞர் உதவியுடன் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் அல்லது வழக்கறிஞர் உதவி எதுவும் தேவையில்லை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு பதிவு செய்யலாம்