Last Updated:
ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் மாயமான இரண்டு சிறப்பு காவல் அதிகாரிகளின் சடலங்கள் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்த்வார் மாவட்டத்தில் உள்ள டச்சான் மற்றும் மர்வா வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த ரஷ்பால் குமார் மற்றும் பாபி சந்த் ஆகியோர் திடீரென மாயமாகினர். வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு கேட்டதாக கூறப்படும் நிலையில், அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், செனாப் பள்ளத்தாக்கின் மேல் பகுதியில் உள்ள தெர்னா வனப்பகுதியில், இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. உயிரிழந்த இருவரின் உடல்களிலும் துப்பாக்கிச் சூடு காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாதிகள் தாக்கி இருவரும் உயிரிழந்தனரா என பாதுகாப்பு படையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
முன்னதாக தெற்கு காஷ்மீரின் குல்காமில் உள்ள சிஆர்பிஎப் படையின் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 வீரர்கள் காயமடைந்தனர். இரு சக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 46வது பட்டாலியனை சேர்ந்த ராகேஷ் தாஸ், சந்தோஷ் சந்துரு, சோம்வீர் சிங் காயமடைந்தனர். சிஆர்பிஎப் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மறுநாளே இரு சிறப்பு காவல் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

