Last Updated:
காசா அமைதி ஒப்பந்த வெற்றிக்கு டிரம்ப்பை பிரதமர் மோடி வாழ்த்தினார், இஸ்ரேல் நெதன்யாகுவையும் தொடர்பு கொண்டார், வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் ஆலோசனை நடந்தது.
காசாவில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாராட்டிய பிரதமர் மோடி, வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் ஆலோசித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சியால் இஸ்ரேலும், ஹமாஸூம் அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டன. இதன்மூலம் இரு தரப்பிற்கு இடையே இரண்டு ஆண்டுகளாக நீடித்த போர் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் காசா அமைதித் திட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக தனது நண்பர் டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றி டிரம்பிடம் ஆலோசனை நடத்தியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதேபோன்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடியின் தொலைபேசி அழைப்பால் நெதன்யாகு தனது பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தை சிறிது நேரம் நிறுத்தி வைத்தாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேல் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கிடையே, ஹமாஸ் வசம் உள்ள இஸ்ரேலிய பிணையக் கைதிகள் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்படலாம் என்று அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
October 10, 2025 7:25 AM IST

