Last Updated:
இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த நிலையில், சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை நடைபெற்றது.
12 பேர் உயிரிழந்ததற்கு காரணமாக கூறப்படும் இருமல் மருந்தை தயாரித்த காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தைச் சேர்ந்த நிறுவனம் விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் குழந்தைகள் இறப்புக்கு காரணமாக கூறப்படும் இருமல் மருந்தை, தமிழ்நாட்டில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள குறிப்பிட்ட மருந்து உற்பத்தி ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்குள், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஒன்று முதல் 7 வயது வரை உள்ள 12 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் சென் பார்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தை அந்த குழந்தைகள் உட்கொண்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மத்திய பிரதேச அரசு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், காஞ்சிபுரத்தில் உள்ள சென் பார்மா நிறுவனத்தில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் குருபாரதி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பேட்ச் 13-ல், தயாரிக்கப்பட்ட, கோல்ட்ரிப் உட்பட 5 மருந்துகள் ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதில், கோல்ட்ரிப் மருந்தில் மட்டும் சிறுநீரகத்தை செயலிழக்க செய்யும் டை எத்திலீன் கிளைசால் என்ற ரசாயனம் 48 விழுக்காட்டிற்கு மேல் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.
இதனால், அந்நிறுவனத்தின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும் மறு உத்தரவு வரும் வரை தமிழ்நாடு முழுவதும், கோல்ட்ரிப் மருந்தின் விற்பனை மற்றும் விநியோகத்தை நிறுத்தி வைக்குமாறு ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என அமைச்சர்.மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
October 04, 2025 10:57 AM IST

