Last Updated:
பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
பிகாரில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், 75 லட்சம் பெண்களுக்கு தொழில் தொடங்குவதற்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பிகாரில், ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், முதலமைச்சரின் மகளிருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 75 லட்சம் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு, முதற்கட்டமாக தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு கோடியே 11 லட்சம் பெண்கள் விண்ணப்பித்து இருப்பதாக அம்மாநில ஊரக வளர்ச்சி துறை தெரிவித்துள்ளது. இதில், தகுதியான 75 லட்சம் பெண்களை தேர்வு செய்து, முதற்கட்டமாக தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண்களின் வங்கிக் கணக்கிற்கு நிதியை நேரடியாக வரவு வைக்கும் இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நாளை தொடங்கி வைக்கிறார்.
6 மாத ஆய்வுக்கு பிறகு, பணம் பெற்றவர்களின் தொழில் திறனை வைத்து 2 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
September 25, 2025 11:34 AM IST


