Last Updated:
மேற்கு வங்கம், கொல்கத்தாவில் பெய்த கனமழையின் காரணமாக ஒரே இரவில் 7 பேர் பலியாகியுள்ளனர். நகரம் முழுக்க வெள்ளம் சூழ்ந்து அனைத்துவிதமான போக்குவரத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழையின் காரணமாக இதுவரை மொத்தம் 7 பேர் பலியாகியுள்ளனர். இதில் மூன்று பேர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளனர். இந்த கனமழையின் காரணமாக பேருந்து, ரயில், மெட்ரோ, விமானம் என அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவின் பெனியாபுகூர், காளிகாபூர், நேதாஜி நகர், கரியாஹத் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்துள்ளது. இதனை மேகவெடிப்பு என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. காரணம், சில மணி நேரத்தில் காம்தஹாரியில் 332 மி.மீ மழையும், ஜோத்பூர் பூங்காவில் 285 மி.மீ, காளிகாட்டில் 280 மி.மீ. என மழை பதிவாகியுள்ளது.
குறுகிய காலத்தில் இவ்வளவு கனமழை பெய்ததன் காரணமாக கொல்கத்தா நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளால் தங்கள் வாகனத்தை இயக்க முடியாத சூழலும் நிலவி வருகிறது.
மெட்ரோ ரயில் நிலையம், விமான நிலையத்தின் ஓடு பாதைகளிலும் நீர் சூழ்ந்துள்ளதால் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 62 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 42 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
வங்காள விரிகுடாவில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவே மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளினுள்ளும் மழை நீர் புகுந்துள்ளதால் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மழை வெள்ளம் குறித்து பேசியுள்ள கொல்கத்தா மேயரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஃபிர்ஹாத் ஹக்கீம், “இதுவரை இவ்வளவு வெள்ளத்தை கண்டதில்லை. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு மற்றும் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை தொடர்வில்லை என்றால் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும்” எனத் தெரிவித்துள்ளார்.
துர்கா பூஜை விழா துவங்க உள்ள சூழலில், இந்த விழாவை வெகு சிறப்பாக கொண்டாடும் மேற்குவங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் மிக கனமழையும், அதனால் ஏற்பட்ட பெரும் வெள்ளமும் மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பல்வேறு இடங்களிலும் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்களும், கடைகளும் இந்த மழை வெள்ளத்தில் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.
September 23, 2025 4:34 PM IST

